மனசு
வலிக்கிறது.....
கேள்விகள்
பதில்கள் தெரியாமல் தவிக்கின்றன......
இரண்டு
நாட்களுக்கு முன்...... மழை அடித்து பெய்துக் கொண்டிருந்தது.
பள்ளி நேரம்
முடிந்து வெகு நேரமாகியும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை அழைத்துச் செல்ல அவன்
தாய் வரவில்லை....
பையன் அழுதபடி.....
எங்களால் சமாதானம் செய்யமுடியவில்லை.. பால், பிஸ்கட், எதுவும் வாங்க
மறுத்துவிட்டான்..
வீட்டின்
செல்பேசி இரண்டும் அணைக்கப் பட்டிருக்க... என்ன செய்வதென்று தெரியாமல் நாங்கள்
தவித்துக் கொண்டிருந்தோம்..
எங்களுக்கும்
நேரமாகிக் கொண்டே இருந்தது.
காலையில் சரியான
நேரத்திற்கு குழந்தையை பள்ளிக்கு அனுப்பி, மதியம் உணவு கொண்டு வந்து கொடுத்து,
மாலையும் சரியான நேரத்திற்கு வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்துவிடும் அவனது
அம்மாவிற்கு இன்று என்னவாயிற்று?
கணவர்,
இந்தியாவின் எல்லைக்கோட்டில் நாட்டிற்காக உழைத்துக் கொண்டிருக்க, ஆறு வயதிலும்,
மூன்று வயதிலும் இரண்டு மகன்களையும், தனியாய் இங்கே வளர்த்துக் கொண்டிருந்தாள்.
குழந்தைகள் இருவரும் சரியான சுட்டி... படிப்பிலும், விளையாட்டிலும்,
தனித்திறமைகளிலும் தங்களை நிருபித்துக் கொண்டிருந்தனர்.
இருபது வயதே நிரம்பிய பெண் , தனி ஆளாய் குழந்தைகளை மிகச்
சரியாய், திறமையாய் வளர்த்து வருவதில் எங்களுக்கும் ஆச்சரியமான விஷயங்களில் ஒன்றாக
இருக்கும்.... எந்த சலுகைக்காகவும், அவளது குழந்தைகளுக்காகவும் அவள் எங்களிடம்
வந்து நின்றதே இல்லை. பாராட்ட மட்டுமே சந்தித்துக் கொள்வோம்...... அப்போது
எங்களுக்கு உறுத்தும் ஒரே விஷயமாக இருந்தது அவளுக்கும் அவளது கணவருக்கும் உள்ள 15 வயது
வித்தியாசம் தான்.
சரி விஷயத்திற்கு
வருவோம்....
இன்னும் அந்த
குழந்தையின் அழுகை நிற்கவில்லை.... எங்கேயாவது வெளியே சென்று, மழையில் மாட்டிக் கொண்டுவிட்டாளோ? மறுபடியும் போனில் கூப்பிட்டோம்.....
போன் அணைக்கப் பட்டிருந்தது..... எங்கள் பள்ளியில் படிக்கும் அவனது வீட்டருகே
இருக்கும் மற்றொரு மாணவியின் எண்ணைத் தேடி , அழைத்து, விஷயத்தை சொன்னோம். அவர்,
அவனது வீடு பூட்டி இருக்கிறது என்றும், தான் வந்து அழைத்துப் போவதாகவும் சொன்னப்
பிறகு தான் எங்களுக்கு நிம்மதியாய் இருந்தது.
அவனை அவரிடம்
ஒப்படைத்து விட்டு நாங்கள் எங்கள் வீடு வந்து சேர்ந்தோம்..
மறு நாள் காலை
பள்ளிக்குச் சென்றால், பெரிய கதை ஒன்று முளைத்திருந்தது.
அந்த பெண் தன்
பக்கத்து வீட்டு இளைஞனோடு எங்கோ போய் விட்டாள்....
கொடுமை என்னவென்றால்,
தன் இரு குழந்தைகளை பற்றியும் கவலைப்படாமல் , தெருவில் விட்டுவிட்டு ஓடிவிட்டாள்..
தகவல் சொல்லப்பட்டு, கிராமத்தில் இருக்கும் அவளது மாமியார் வரும் வரை அம்மாவை
காணாமல், அழும் குழந்தைகளை, தெருக்காரர்கள் இரவு முழுவதும் வைத்துக் கொண்டு
தவித்துக் கொண்டு இருந்திருக்கின்றனர்.
இராணுவத்தில் இருக்கும் அவளது கணவனுக்கு தகவல் அளித்தததோடு,
காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் அவளை மாலைக்குள் கண்டுப்பிடித்து,
காவல் நிலையத்தில் வைத்திருக்கின்றனர்.
அவள், தன்னை விட அதிக வயதான , சந்தேகப்பிராணியான தன் கணவரும், அவரது இரண்டு குழந்தைகளும் வேண்டாம் என்றும்,
தான் அந்த இளைஞனோடு தான், தன் புதிய வாழ்க்கையைத் தொடங்கப் போவதாக பிடிவாதமாய்
கூறிக் கொண்டிருக்கிறாளாம்... காவல் துறையும், உறவினரும், அவளுடைய கணவரின்
வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அவளது குழந்தைகள்
இருவரும், விவரம் தெரியாமல் அம்மாவைத் தேடி அழுதவண்ணம் இருக்கின்றனர். பள்ளிக்கு
வரவில்லை. சாப்பிடவும் பிடிவாதமாய் மறுத்து வருகின்றனராம். அம்மா தங்களை பார்க்க
கூட விரும்பவில்லை என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
இரண்டு
குழந்தைகளுக்கு சரியான அம்மாவாக இருந்து வந்த அந்த பெண், இப்படி செய்ததது யார்
குற்றம்? யாரை சொல்வது?
பணம் காசுக்கு
ஆசைப்பட்டு, அதிக வயது வித்தியாசத்தில் தன் ஒரே மகளை திருமணம் செய்துக் கொடுத்த
அந்த பெண்ணின் தாயின் குற்றமா?
தன்னை விட15 வயது
சிறிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு, எங்கோ இருந்துக் கொண்டு, அவளை
எல்லாவற்றிக்கும் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய அவளது கணவனின் தவறா?
இரண்டு
குழந்தைகளுக்கு தாயான அந்தப் பெண்ணின் மனதை மாற்றி, தன் குடும்பத்தையும்
ஏமாற்றிவிட்டு அந்தப் பெண்ணோடு வாழ திட்டமிட்ட அந்த இளைஞனின் குற்றமா?
எப்போதாவது பத்து
நாட்கள் வீடு வரும் தன் கணவனின் கொடுமைகளை தாங்கிக் கொள்ளமுடியாமல், தான் பெற்ற
குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு, இப்போது பார்க்கக் கூட விரும்பாமல் உதறி
தள்ளிவிட்டு, தன் புதிய காதலனோடு வாழ இருக்கும் தாயின் குற்றமா”?
எந்த விவரமும்
புரியாமல், தாயை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும் அந்த குழந்தைகளுக்கு என்ன பதில்
அளிக்கப் போகிறது அந்தக் குடும்பம்?
அந்தப் பெண்ணால்
தன் குழந்தைகளை மறந்து, தன் வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்ள முடியுமா? அவளோடு வந்திருக்கும்
அந்த இளைஞனுடன் அவள் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறுமா?
திருமணமாகாத தன்
ஒரே மகன் இப்படி செய்துவிட்டானென்று அவனின் வயதான பெற்றோரின் தவிப்பை யார்
புரிந்துக் கொள்ளப் போகிறார்கள்?
கணவனையும்,
குழந்தைகளையும் உதறிவிட்டு, புதிய
வாழ்க்கையைத் தேடிக் கொண்ட அந்தப் பெண்ணை நிம்மதியாய் வாழவிடுமா இந்தச் சமூகம்?
எல்லா
பஞ்சாயத்தும் முடிந்து, அந்த பெண் தான் விரும்பிய ஆணோடு வாழத் தொடங்கலாம்.....
அந்த ஆணும்,
அவனது குடும்பமும் அவளை ஏற்றுக் கொண்டு வாழலாம்...
அவள் கணவணும்
இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து, சந்தேகப்பட்டுக் கொண்டு இருக்கலாம்.
இந்த சமூகமும்
இவற்றையெல்லாம் மறந்து , அடுத்த கதையை அசைப் போட ஆரம்பிக்கும்.....
ஒன்றும் அறியா
அந்த இரண்டு குழந்தைகளின் வாழ்க்கை?
அவர்களது
இருப்பிடம், உணவு, அன்பு, அரவணைப்பு... இப்படி..... இதெல்லாம் தொலைத்து.... தங்கள்
எதிர்காலத்திற்கு வித்தான கல்வியையும் தொலைத்து விடப் போகிறார்கள்.
தாயன்பும்,
தந்தையின் அரவணைப்பும், இருந்தும் இல்லாத இந்த குழந்தைகளுக்கு நாம் என்ன பதில்
சொல்லப் போகிறோம்?







