Sunday, 18 August 2013

புது வரவு...

எங்கள் வீட்டிற்குள் புதிதாய் நுழைந்து எல்லோரையும் ஈர்த்து மகிழ்ச்சியை கொடுத்து கொண்டிருக்கும் பிறந்து ஒரு மாதமே ஆன புது மனுஷி...



Monday, 5 August 2013

இன்று காலையிலிருந்து மாலை பள்ளி முடியும் நேரம் வரை சரியான வேலை. ..

கல்வித்துறையிலிருந்து  மெயில் மூலம்  வந்திருந்த அனைத்து கடிதங்களுக்கும் பதில் எழுதி அனுப்பி , இ டையிடையே எனது  வகுப்புகளுக்கும் சென்று வந்துக் கொண்டிருந்ததால் நேரம் அதிகம் தேவைப் பட்டது இன்றைக்கு.......

பள்ளி மேற்பார்வைக்கு நேரம் கிடைக்கவில்லை .......

எல்லா   அலுவல்களையும் முடித்து விட்டு நான் மதிய உணவு உண்ண உட்கார்ந்த நேரம் மாலை மணி நான்கு.......

இன்றைய வேலைகளை முடித்த திருப்தியை மீறி எனக்கு மனசும் உடம்பும் களைப்பாய்  உணர்ந்தேன் ......

kg குழந்தைகளுக்கு   பள்ளி முடிந்து வீடு நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர்.

மிக மகிழ்ச்சியோடு வீட்டிற்கு ஓடும் குழந்தைகள் என்றைக்கு அதே மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வருகின்றனவோ அன்றைக்கு தான் கல்வியும் பள்ளிகளும் வெற்றி பெறும் ........

யோசித்துக் கொண்டே சாப்பிட்டுக்  கொண்டிருந்தேன் ....

என் அறை  மெல்லத் திறந்தது ............ஆயாவிடம் யாரையும் என்னைப் பார்க்க அரை மணி நேரம் அனுப்ப வேண்டாம் என்றேனே!

கதவை திறக்க கஷ்ட படுவது தெரிந்தது ......

எழுந்துப்   போய் திறந்தேன்......ஒரு வாண்டு... தன்  புத்தகப்பையை முதுகிலும், லஞ்சு  கூடையை கையிலும் தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு நின்றிருந்தான் .........'.என்ன நல்லா கதவை திறங்க', என்றபடி ..

என்னமா அம்மா வரலையா ? வீட்டிற்கு போகலாம் இரு இப்போ அம்மா  வந்திடுவாங்க '  என்றேன்...

அவன் பின்னால் அவனின் அம்மா.....கேள்வியாய் பார்த்தேன் ........

என்ன உங்களை காலைலேர்ந்து  காணோம் ?  ஏன் என்னை பார்க்க வரலை ?உங்களை தேடினேன்...; என்றான்.
      
மேடம் இப்போ தான் சாப்பிடுறாங்க அதான் அவங்களை  பார்த்திட்டோம் இல்லே நாளைக்கு வரலாம் வா.' என்று அவன் கையை இழுத்தபடி அவனின் அம்மா
.' சாரி  மேடம், இவன்   உங்களை பார்க்காமல் விட்டிற்கு வரமாட்டேன்  என்றான் அதான்...' என்றபடியே சென்றார் . ....

என்   களைப்பெல்லாம் ஓடிப் போன இடம் தெரியவில்லை.......  
       

Friday, 2 August 2013

தாக்கம்...

நேற்று மதியம் பத்தாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது ,  LKG மிஸ் ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு பதைத்து   ஓடி வந்தார். அந்த குழந்தை  தன் கைகளால் தன் கண்களை மூடிக் கொண்டிருந்தாள் .   வகுப்பை விட்டு வெளியே வந்து  பார்த்தேன்.  "என்ன ஆச்சு",  என்றேன்.  சக்தி பாலா  இவளோட கண்ணுல பென்சிலால குத்திட்டான் மேடம் :, என்றார்.
நான் அவளை வாங்கி என் அறைக்குள் தூக்கிச் சென்றேன்.  
ஒரு கையால் தன் வலது கண்ணை மூடிக் கொண்டே அவள் என்னிடம் , ;மேடம் என்னை இறக்கி விடுங்க நான் நடந்து வர்ரேன் எனக்கு ஒண்ணும் இல்லே ' என்றாள் , எனக்கு ஆச்சரியம் இந்த குழந்தைக்கு எவ்வளவு மனத் தைரியம் ! அவளை இறக்கி விட்டேன் . அவள் கைகளை எடுத்து கண்ணை பார்த்தேன்.  கண் இரத்தச் சிவப்பாய் இருந்தது.  எங்கு  பென்சில் குத்தப்பட்டிருக்கிறது என்று பார்த்தேன். கண் ஓரத்தில் வெள்ளை படலத்தில் குத்தியிருந்தான். உடனடியாக மருத்துவரிடம் அழைத்துப் போக வேண்டும் . அவளின் தந்தைக்கு போன் செய்தேன். அவர் வெளியூரில் இருந்தார்.   அவரிடம் பக்குவமாய் நடந்ததை கூறி அவர் மனைவியை அனுப்பும்படி சொன்னேன்.
அந்த குழந்தைக்கு முதல் உதவி செய்து படுக்கவைத்து   விட்டு  அவள் வகுப்பிற்கு சக்திபாலாவை பார்க்கப் போனேன் .
நான் நினைத்த மாதிரியே அதற்குள் ஆயாவிலிருந்து ஆசிரியர் வரை அவனை அதட்டி பயமுறுத்தி வைத்திருந்தனர். நல்லவேளை எங்கள் பள்ளியில் யாரும்  கட்டாயமாக  அடிக்ககூடாது  என்று பள்ளி துவங்கிய நாளிலிருந்து நிர்வாகம் சொல்லி   இருப்பதால் யாரும் எந்த வகுப்பின் மாணவர்களையும்  அடிப்பதில்லை.
நான் அவனைப் பார்த்தப் போது அவன் ரொம்ப பயந்து போயிருந்தான் . அழுதும் கொண்டிருந்தான் .  ; இங்கே கிட்டே வா' என்றேன் .  வரமாட்டேன் என்று    தலையாட்டினான் .
 நான் அவனிடம்   சென்று அவனருகில் அமர்ந்தேன் . நான் ஒண்ணும்   பண்ணலே அவ தான் நா எழுதும் போது என் கன்னத்தில் கிள்ளினா, எனக்குகோவம்  வந்தச்சா அதான்  அவளை குத்தினேன்"என்றான் தானாக ..........
 எனக்கு  பாவமாக இருந்தது ....அந்த குழந்தையையும் என்ன செய்வது. ?
   சரி இனி இப்படிலாம் செய்யக் கூடாது .. ஆனா ஒண்ணு மட்டும்  சொல்லு  உனக்கு ஏன் இப்படி கோவம் வந்தது பென்சில்ல குத்தினா எப்படி வலிக்கும் தெரியுமா?   என்று சொல்லிவிட்டு எழுந்தேன் ............
அவளுக்கு   இரத்தம் வருதா ?   மிஸ் என்று தயக்கத்தோடு கேட்டான் ....'இல்லை ',என்றேன்.
'இல்லையா ?' என்று அதிருப்தியோடு கேட்டு விட்டு    தனக்குள் எதோ முனக துவங்கினான் .......
 மூன்று வயது பையனின் கோவத்தோடு அவனின் எண்ணத்தின் ஆபத்தையும் உணர்ந்தவளாய் அவனின்    தந்தையிடம் கண்டிப்பாக பேசவேண்டும் என்று முடிவோடு நகர்ந்தேன்.  இப்படியே வளர்ந்தால் இவனின் வாழ்க்கை எப்படி இருக்கும் ?
அந்த பையனின் தவறா?  அவனின்   பெற்றோர்களின் வளர்ப்பில் தவறா?