கற்க கசடற...
“எவ்வளவு தடவை
சொல்லிக்கொடுத்தாலும் கோபி மாதிரி குழந்தைகளுக்கு வரவே வராது, சுட்டுப் போட்டாலும்
வராது.. இவங்களுக்கு சொல்லித் தர்றதுக்கு பதிலா நான் வேலைய விட்டு நின்னுடலாம்,
மேடம்”, என்று இயலாமையும், கோபமுமாய் தேர்வுக் கட்டுகளை என் முன்னே நீட்டி நின்றார், மூன்றாம் வகுப்பு கணக்கு ஆசிரியர்.
வாரத் தேர்வில், மூன்றாம்
வகுப்பில், குழந்தைகள் பலரும் கணக்குப் பாடத்தில் மிகவும் குறைந்த மதிப்பெண்கள்
பெற்றிருந்தனர். அதனால் அவர்களின் கணக்கு ஆசிரியரை அழைத்தேன், அவர் கூறிய
வார்த்தைகள் தான் இந்த கட்டுரையின் முதல் பத்தி.
அவரை பார்க்க பாவமாக
இருந்தது. நேர்மையாய், ஈடுபாட்டுடன் இருக்கும் ஆசிரியர்களுள் அவரும் ஒருவர். கோபியின்
விடைத்தாளை வாங்கிப் பார்த்தேன். அவன் எழுதியதை விட சிவப்பு மையினால் அடிக்கப்பட்டு
எழுதியிருந்ததே அதிகமாய் இருந்தது.
எந்த ஒரு கணக்குக்கும்
வினாக்களின் எண்கள் இல்லை. எண்களும் எழுத்துகளும் தாறுமாறாய் கிடந்தன. கூட்டல் கணக்குகளில் கூட தவறுகள். ஏதோ.....
ஆசிரியருக்காக.... எழுத வேண்டுமே என்று எழுதியது போல் இருந்தது.
எதேச்சையாக பார்த்தேன்,
ஒரு கூட்டல் கணக்கின் விடை சரியானதாக இருந்தது. ஆசிரியர் தவறு என்று
அடித்திருந்தார். மீண்டும் கவனித்தேன். மிகச் சரியாய் கூட்டிப் போட்டிருந்தான்.
வினாவை கூர்ந்துக் கவனித்தபோது தான் அவனது தவறு புரிந்தது. எண்களின் ஸ்தானங்களை
தவறாக எழுதிக் கூட்டியிருந்தான்.
ஆனால் ஒரு விஷயம்
புரிந்தது. அவனுக்கு ‘கூட்டல்’ நிச்சயம் தெரிந்து இருக்கிறது.
இந்த கணக்கில் தவறு என்ன
என்று ஆசிரியடம் கேட்டேன். அவர் தாளைப் பாராமலேயே, “மேடம் அதற்கு விடை வேறு....
இவன் தவறாக எழுதியிருக்கிறான்.“ என்றார். “கோபியை பலமுறை கூட்டல் கணக்குகளை போட
வைத்திருக்கிறேன். போர்டில் சரியாக போடுகிறான். பரீட்சையில் மட்டும் எழுத மாட்டேன்
என்கிறான்”, என்று பொரிந்துத் தள்ளினார்.
‘இல்லை, நீங்கள்
நினைப்பது போல் இல்லை. கோபிக்கு கூட்டலில் பிரச்சனை இல்லை. எண்களின் ஸ்தானம் தான்
தெரியவில்லை. இதுவரை நீங்கள் அதை கவனிக்கவில்லை.. எண்களின் ஸ்தானம் தெரியாமல்,
கூட்டல் மட்டுமில்லை, எந்த கணக்கு முறையையுமே போடமுடியாது. அவனைப் பொறுத்தவரை இந்த
கூட்டல் கணக்கு சரியே ! நீங்கள் தான் அந்த
குழந்தையின் புரிதலை இதுவரை கவனிக்கவே இல்லை. கோபி தொடர்ந்து குறைந்த மதிப்பெண்கள் வாங்குவது இதனால் தான்.
அதனால் அவனுக்கு முதலில் எண்களின் ஸ்தானங்களை புரிய வையுங்கள்” என்று கூறி அனுப்பி
வைத்தேன்.
கோபி, மூன்றாம் வகுப்பு
வந்தும் கூட்டல் கணக்கு கூட போடத்தெரியாதவன் என்று முத்திரை குத்தப்பட்டவன்.
ஆசிரியர் , போர்டில் கூட்டல் கணக்கிற்கான வினாக்களை எழுதியபின் விடைகளைப் போட
வைத்திருக்கிறார். அதனால் அவன் சரியாக
போட்டிருக்கிறான். தேர்வுகளில் அப்படி இல்லை. அதனால் தவறு செய்கிறான்.
உண்மையில் தவறு எங்கு
நடக்கிறது என்று நாம் யோசிப்பதில்லை. தவறு கோபியின் புரிதலில் இல்லை. அவனின் புரிதலைப்
பற்றிய நம்முடைய பார்வையில் இருக்கிறது. குழந்தைகளுக்கு அடிப்படை விஷயத்தை புரிய
வைத்துவிட்டால், அவர்களே, மேலும் மேலும் ஆசிரியரின் உதவியோடு சரியாக செய்து விட
மாட்டார்களா?
தேர்வுகளில் மதிப்பெண்கள்
யாருக்காக கொடுக்கப்படுகிறது?
மதிப்பெண்கள் ஆசிரியர்களுக்குரியதாகவே
இருக்கிறது. அவர்களது கற்பிக்கும் திறனை குழந்தைகளின்
மூலம் தெரிந்துக் கொள்ள, தேர்வுகளும், மதிப்பெண்களும் தேவைப்படுகின்றன. அவர்கள்
நடத்திய பாடங்களில் குழந்தைகளுக்கு மதிப்பெண்ணிட்டு, பாஸ் அல்லது ஃபெயில் போட்டு, தங்கள்
உழைப்பினை தங்களது பதிவேட்டில் எழுதுகிறார்கள். அதனடிப்படையில் குழந்தைகளை
புத்திசாலி, மந்தபுத்தி, நன்றாய் படிப்பவன், பின் தங்கியவன் என்றெல்லாம் பிரித்து,
அவர்களை நோகடிக்கிறார்கள்,
இன்னும் சொல்லப்போனால், மதிப்பெண்களை
காட்டியே குழந்தைகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றனர். மதிப்பெண்களை,
குழந்தைகளுக்கெதிரான ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். அதன் மூலம், ஒருவித பயத்தையும்
குழந்தைகளின் மனங்களில் வலுக்கட்டாயமாக திணிக்கின்றனர். அவர்களின் மனதில்
பாதுகாப்பின்மையும் சேர்த்து விதைக்கின்றனர்.
பிரச்சனை, குழந்தைகளுக்கு
மதிப்பெண் தேவையா இல்லையா என்பதில் இல்லை. மதிப்பெண்களை மறந்துவிட்டு, நம்முடைய
அதிகாரத்தை வீசியெறிந்துவிட்டு நம்மால் பாடம் நடத்த முடியுமா என்பதில் தான்
இருக்கிறது.
மதிப்பெண்களையும்,
ஆசிரியர்களையும் பிரிக்க முடியுமா? அவற்றை விலக்கி வைத்துவிட்டு பாடம் நடத்தி
வகுப்புச் சூழலை மாற்றமுடியுமா?
வகுப்பறைகளை தாண்டி இன்று
குழந்தைகளுக்கு இருக்கும் மன அழுத்தம் பற்றி நம்மில் எத்தனை பேர் புரிந்து
வைத்திருக்கின்றோம்?
அவர்களுக்கு அப்படி என்ன மன
அழுத்தம் இருந்துவிட போகிறது என்று நாம் நினைக்கலாம்.
நாள்தோறும் காலையில்
பள்ளிக்குள் நுழையும் பத்துக் குழந்தைகளில் ஏழு குழந்தை மன அழுத்தத்தோடு தான் வருகின்றன.
வீட்டுப் பாடம்
செய்யமுடியாத குழந்தைகள், காலைக் கடிக்கும் பழைய காலணியை மாற்றிக் கொடுக்காத தந்தை
மேல் வருத்தத்தோடு வரும் குழந்தைகள்,
பிடிக்காத அறிவியல் வகுப்பு அன்றைக்கு இரண்டு முறை இருக்கிறதே என்று கவலைப்படும்
குழந்தைகள், தான் வைத்த செடியை யாரோ பிடுங்கிப் போட்ட சோகத்தோடு வரும் குழந்தைகள்,
தனக்குப் பிடிக்காத மதிய உணவை கொண்டு வந்திருக்கிற குழந்தைகள்.....
இப்படி அவரவர் தன்மைக்கேற்ப
பலவிதமான அழுத்தங்களோடு தான் வகுப்பறைகளுக்குள் உட்கார்ந்திருக்கின்றன,
குழந்தைகள்.....
அவற்றைப் புரிந்துக்
கொள்ளக் கூட ஆர்வம் காட்டாமல், ஆசிரியர்கள் குழந்தைகளின் மென்மையான இதயத்தை
வார்த்தைகளாலும், செயல்களாலும் காயப்படுத்தி, அவர்களின் சின்னஞ்சிறு உலகினை
அழித்துக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களுக்குள் இருக்கும்
தனி உலகை, உணர்வுகளை, விருப்பு வெறுப்புகளை தெரிந்துக் கொள்ளாமலயே, வளர்க்கிறோம்
என்கிற பெயரில் அவர்களை தினம் தினம் சாகடித்துக் கொண்டிருக்கின்றனர்..
குழந்தைகளின் மனதில்
எண்ணிலடங்காத புதையல்கள் புதைந்துக் கிடக்கின்றன. அவற்றை கண்டறியும் திறமையும்,
ஆர்வமும் நம்மிடம் இல்லை. அவர்களின் மனதை தெரிந்துக் கொள்ள, பெற்றோர்களும் கூட
தவறிவிடுகின்றனர். இத்தகைய சூழலில் நம்மோடு வளரும் குழந்தைகளுக்கு இது ஒரு பெரிய
சாபக்கேடு...
இரண்டு நாட்கள்
விடுப்புக்குப் பின் பள்ளி திரும்பிய ஆசிரியரைப் பார்த்தவுடன், ‘டாக்டர்கிட்டப்
போய் ஊசிப் போட்டீங்களா? காய்ச்சல் சரியா போச்சா?’, என்று அன்பாய் பெரிய மனுஷத்
தோரணையில் கேட்கும் குழந்தைத்தனம் மிகவும் நுண்மையானது, வசீகரமானது,
இயல்பானது..... அவை, அவர்கள் வளரும் சூழ்நிலைக்கேற்ப மாறி விடுகின்றன அல்லது
மறைந்து விடுகின்றன.
குழந்தைகளுடைய
நடவடிக்கைகளின் ஆழத்தை புரிந்துக் கொண்டு, அவற்றில் அடங்கியிருக்கும் ஆற்றல்களை
கண்டறிந்து, ஊக்கம் கொடுத்து விரிவுபடுத்தும் நோக்கம் நமக்கிருந்தால் போதும்,
அதைப் பிடித்துக் கொண்டு மேலே வந்து விடுவார்கள், குழந்தைகள்.
தம் பள்ளி வாழ்க்கையில்,
ஒவ்வொரு குழந்தையும், தன் எதிர்காலத்தின் அடிப்படைகளையும், அதை அடைவதற்கான
பொறுப்புணர்வினையும், மனிதாபிமானத்தையும் கற்றுக் கொள்ள தேவையான சூழ்நிலைகளை
உருவாக்கி, உறுதுணையாய் நிற்கும் கடமை
ஆசிரியர்களுக்கே இருக்கிறது. அவர்கள், அதற்கு ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளை கையாள
கற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளை முழு மனதோடு நேசித்து வழி நடத்த தெரிந்துக்
கொள்ள வேண்டும்.
அன்று தான்.........
பதினைந்து வயதிற்குப்
பிறகும் தான் என்னவாகப் போகிறோம் என்று புரியாமல் அலையடிக்கும் பக்கமெல்லாம்
அலைந்து சீரழிந்துக் கொண்டிருக்கும் குழந்தைகளின் நிலை மாறும்........