Saturday, 29 June 2013

http://www.youtube.com/watch?v=XAsf3RIzOGY

என் மகன் அர்ஜுன் எழுதி இசை அமைத்து இயக்கிய இசைப் பாடல் ........ 

mugamoodi

வார  நாட்களில் எல்லோரும் வேலைக்குப்    போய்விடுவதால்  சனி ஞாயிறு  இரண்டு நாட்கள் எங்கள் வீடு  அமர்களப்படும்.   எங்கள் எதிர்வீட்டு சுட்டிப் பையன் கெபினின் வருகையால் .

மூன்று வயது நிரம்பிய அவனின் பேச்சு, குழந்தைத்தனமும் , புத்திசாலித்தனமும்  நிறைந்து இருக்கும். அவனின்   பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள் . மூன்று வயது வரை க்ரஷில் இருந்ததால் அவன் யாரிடமும் எளிதாய் பழகி விடுகிறான்.

அவனிடம் பேசிக் கொண்டிருந்தால் ஒரு நளைக்கு 24 மணி நேரம் போதாது.

அவன்  கேட்கும்  கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல முடியாது. அவன் நம் பதிலில் திருப்திப்படும் வரை நம்மை விடமாட்டான் . வேறு எந்த சேட்டையும் அதிகம்  செய்ய மாட்டான் .

படிக்கும் வயது வந்ததால் அவனை ஒரு தனியார் பள்ளியில் KG சேர்த்திருக்கிறார்கள். பதினைந்து நாட்களாய் பள்ளிக்கு போய் வருகிறான் .

இன்று சனிகிழமை.

அவன் வரவை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் .  இன்னும் அவன் வரவில்லை.
 பள்ளி போக துவங்கியது முதல் அவனது சிரிப்பும் , பேச்சும் தொலைந்துப் போனது.

தினந்தோறும் பள்ளிக்கு கிளம்புகையில்  அவனை 'எங்கே சிரிம்மா ' என்றால்
அவன் 'நான் சிரிக்கிறேன் தான் மம்மி ஆனால் அழுகை தான் வருது என்கிறானாம்' . மேலும் அவன் பேசுவதே இல்லை.

எதையும் சமாளித்து,  எதற்கும் அழாத குழந்தையின் வீட்டில்  இப்போதெல்லாம் அவனின் அழுகை சத்தமே  அதிகமாய் கேட்கிறது ...

ஒரு பதினைந்து நாள் பள்ளி வாழ்க்கை அவனது  இயல்புத் தன்மையை புரட்டிப் போட்டு   விட்டதா?  குழந்தைத் தன்மையை திருடி எடுத்துக் கொண்டதா பள்ளி ?

இந்த ப்த்னைந்து நாட்களில் அவன் பள்ளியில் கற்றுக் கொண்ட பாடம் ...
 
தன ஒரு கையை  மடக்கி வைத்து, ஒரு கையின் ஆட்காட்டி விரலை உதட்டில் வைப்பது ........  

 'ஷ்' என்கிற குரல்  எங்கிருந்து ,எதற்காக வருகிறது என்று அவன் யோசிக்காமல் தன்னையும் அறியாமல் தன ஆட்காட்டி விரலை உதட்டில் வைத்துக்  கொண்டு  என்னத்தை பெரியதாய் சாதித்து விடுவான் , இல்லை நாம்  என்ன   சாதித்து விட்டோம்  என்று நினைக்கிறோம் ?

குழந்தைகளின் மனதை திருடும்  இன்றைய   கல்விச் சூழலை குழந்தைகளுக்கான் சூழலாக எப்படி  மாற்றப்   போகிறோம்?
    

Friday, 28 June 2013

haajira

முதல் வகுப்பு  படிக்கும்  ஹாஜிராவைப்  பற்றி இன்று சொல்லப்   போகிறேன் .

நான் வியந்து வியந்து  பார்க்கக் கூடிய குழந்தை அவள். மிகச் சரியாக ஆட்களை எடைப் போ ட்டு வைத்திருப்பாள். அவள் முன் யாரும் தவறு செய்து விட முடியாது. மனதில் உள்ளதை  சொல்லி விடுவாள்.   படிப்பிலும் படு சுட்டி.

எல் . கே .ஜி  படிக்கும் போது ஒரு நாள்  இந்தப்  ப்ள்ளிக்கூடம்  எனக்கு பிடிககலை .நான் வீட்டிற்கு  போகிறேன்  என்று அழுதுக்  கொண்டிருந்தாள்.
நான்  மதியம் ரவுண்ட்ஸ் போகும் போது  அவளின் வகுப்பு ஆசிரியர் என்னிடம் ,; மேடம் ஹாஜிரா காலையிலிருந்து இன்னும் அழுதுக் கொண்டிருக்கிறாள். கேட்டாலும் சொல்ல மாட்டேன் என்கிறாள். அடித்தும் விட்டேன் . கொஞ்சியும் பார்த்து விட்டேன்.. இப்படியேத்தான் அழுதுக் கொண்டிருக்கிறாள். , என்றார். நான் உடகே அவளை அருகில் அழைத்து சமாதானம் செய்யத   தொடங்கினேன்.
ம்ஹூம் சரி வரவில்லை . அழுது  அழுது முகம் வீங்கிப் போய இருந்தது ' சரி வாங்க வீட்டுக்குப் போகலாம் என்றும்   கூப்பிட்டுப் பார்த்தேன். வேண்டாம் என்று மறுபடியும்   அழ ஆரம்பித்தாள் , அம்மாவிட ம்   போகணு ம்
 என்று தானே எல்லா குழந்தைகளும் அழும் .....இவளுக்கென்ன   வந்தது ..... நான் அவளின் ஷூ சாக்ஸ் கழற்றி பார்த்தேன் ஏதேனும்  பிரச்சனை இருக்கிறதா என்று... எதுவும் இல்லை.

பின்னர் அவளை தனியாக அழைத்து கேட்டேன் , உனக்கு ஏன் நம்ம பள்ளி பிடிக்கலை என்று சொல்லு என்றேன்  உடனே அவள் மிஸ்ஸை அடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் நான் சொல்றேன் என்றாள் . அப்படியே அவளுக்கு உத்திரவாதம் கொடுத்தேன்.

அவள் மெதுவாக என்னிடம் ,' என் அழரேனு  கேக்க    மாட்டேங்கிறாங்க . சாயங்காலம் வீட்டிற்கு போகலாம் போகலாம்னு சொல்லி அடிக்கிறாங்க மிஸ்.
நான்  அம்மாகிட்டே போகணும்னு சொல்லவே இல்லை.  இந்த ஸ்கூல்ல [வகுப்பில் ] காத்தே வரலை. ரெண்டு fan இல்லை. எனக்கு ரொம்ப வேர்க்குது ..அதை மிஸ் கேக்கவே மாட்டேங்கிறாங்க ...நீங்க சொல்லுங்க மேடம் ,' என்று பெரிய மனுஷத் தோரணையில் சொன்னாள் . எனக்கு சரியான அதிர்ச்சி

....எவ்வளவு பெரிய தவறு செய்கிறோம் நாம். குழந்தைகளை கேட்காமல் நாமே முடிவு செய்து விடுகிறோம்  நிறைய  விஷயங்களை ...
உடனே அவளை காற்று வரும்  இடத்தில் உட்கார வைத்தேன் .உடனே மின்விசிறி இரண்டு வாங்கி மாட்ட ஏற்பாடு செய்தேன்.... இது போல்  தானே ம்ற்ற குழந்தைகளுக்கும் ...... இவள் வாய் திறந்து பேசி விட்டாள் ....
                    

Tuesday, 25 June 2013

கற்றுக் கொள்ள எவ்வளவு இருக்கிறது..............

நான்கு நாட்கள் விடுப்பிற்குப்  பின் இன்று பள்ளிக்குப் போனேன். நான்கு நாட்கள் வீட்டில் எல்லோரோடும் ஜாலியாக இருந்து விட்டு இன்று காலை    பள்ளிக்கு கிளம்ப மனசில்லாமல் தான் கிளம்பினேன். நடந்துப் போகும் போது ' நமக்கே இப்படி ஒரு மன நிலை இருக்கிறதே குழந்தைகள் சனி ஞாயிறு விடுமுறைக்குப் பின் எந்த மன நிலையில் பள்ளிக்கு வரும் ? என்று நினைத்துக் கொண்டே நடந்துப் போனேன்.போகும் வழியில் குழந்தைகளின் சலசலப்பு........கேஜி குழந்தைகள் பலதும் அழுதுக் கொண்டே தங்கள் அம்மாக்களிடம்  மறுபடியும் எப்போது பள்ளி விடுமுறை என்று கேட்டுக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தனர்.  
பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களை பார்த்தவுடன்  என் மன நிலை மாறியது. நான்கு நாட்கள் விடுப்பட்ட என் பணிகள் , வகுப்புகள், குறிப்பாக கேஜி வகுப்பின் குழந்தைகள் என் எதிரே  நின்றது......
முதலில் தேங்கிக் கிடக்கும் கோப்புகளை பார்ப்போம் என்று என் அறைக்குள் நுழைந்தேன். குழந்தைகளுக்கான பஸ் பாஸ் விண்ணப்பங்கள், மாற்றுச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள் ஆகியவற்றை பார்த்துக் கொண்டிருக்கும் போது, என் கதவை திறக்க நாலைந்து குரல்கள் முயற்சித்துக் கொண்டு இருந்தன.......
நான் வேலையில் மூழ்கியிருந்ததால், கவனிக்கவில்லை. திடீரென்று என் புடவையை பிடித்து இழுத்தவாறு கேஜியின் சுட்டிப் பெண் ஆமீனாஅஜித்தா...
நிமிர்ந்தால் அவளைச் சுற்றி  நான்கைந்து வாண்டுகள் தங்கள் பைகளோடு    ....
குட்மார்னிங் மேடம், என்றனர்.
வேலையின் எரிச்சலோடு  அவர்களை,  என்ன  என்று பார்த்தேன்....
 நாங்க உங்களை தான் பார்க்க வந்தோம்..... என்றனர்.
'என்ன விஷயம் என்ன வேணும் ? நீங்க உங்க கிளாஸுக்குப் போங்க...எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிட்டு நா அப்புறமா பார்க்க வர்றேன்... ' என்றேன்...
ஒரு சுட்டி, '.நீங்க ஏன் ரொம்ப நாளா ஸ்கூலுக்கு வரலை?   நாங்க உங்களைத் தேடினோம்.'
நீங்க கேட்ட ரோஜாப்பூ நான் கொண்டு வந்தேன். நீங்க வரலை.... இன்னொரு மிஸ் வாங்கிட்டாங்க. நா நாளைக்கு கொண்டு வர்றேன் என்றாள் சாதனா..
ஏன் வரலை? உங்களுக்கு காய்ச்சலா? என்று கேட்டாள் இன்னோரு வாண்டு .ஊசி போட்டிங்களா?... நீங்க வர்றதை பார்த்திட்டு  நான் தான் இவங்களை கூட்டிட்டு வந்தேன்,' என்றான்  மழலையோடு ஹரிஷ்..
குட்டீஸ், என்னைத் தேடினீங்களா?  நான் ஊருக்குப் போயிட்டு வந்தேன்... இனிமே தினமும் வருவேன் சரியா? என்றேன்...
 அப்போது அவர்களைத் தேடி வந்த ஆசிரியர், நீங்களெல்லாம் இங்க இருக்கீங்களா?  மேடம் நீங்க வராம இவங்க உங்களைத் தேடி கேட்டுட்டே இருந்தாங்க......என்றபடி அவர்களை கூட்டிச் சென்றார்.
 பள்ளி திறந்தது முதல்,, ஒரு வாரமாய் என் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கும்  இவர்களை முதலில் பார்க்க வேண்டும் என்று ஏன் எனக்குத் தோன்றவில்லை. வெட்கமாயிருந்தது....... குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ள எவ்வளவு இருக்கிறது எனக்கு?

 

Thursday, 20 June 2013

யாதுமாகி நின்றவள்

29.5.2012
தாய் ஆகிய என் மாமியார்.....
உடலால் எங்களை விட்டுப் பிரிந்து ஒரு ஆண்டு கடந்துவிட்டது.
இன்றும் எதற்கெடுத்தாலும் அவரைத் தேடுகிறது மனசு.
1989ல் எனது இருபத்தியொன்றாம் வயதில், வாழ்க்கையைப் பற்றி எதுவும் புரியாத நிலையில், என்னை என் பிறந்த வீட்டிலிருந்து வேரோடு பிடுங்கி புகுந்த வீட்டிற்கு அனுப்பிய நாளிலிருந்து சென்ற ஆண்டு 28ம் தேதி தன் இறுதி மூச்சு முடிய வாழ்க்கையின் பல்வேறு கோணங்களை எனக்கு கற்றுக் கொடுத்து என்னை சரியாய் வளர்த்த ஆசிரியர்
‘என்னை விட உனக்கு உன் மாமியாரைத் தான் ரொம்ப பிடிக்கும் என்று பலமுறை என் அம்மாவை பொறாமைப்பட வைத்த பெண்.
வெறும் இளநிலைப் பட்டம் முடித்து வந்த இந்த இருபது ஆண்டுகளில் என்னிடம் பல பட்டங்களும் பாராட்டுப்பத்திரங்களும் இருக்க முக்கிய காரணம் என் மாமியார் எனக்குக் கொடுத்த ஊக்கம்.
குழந்தைகள் இவர்களைப் போல் இருக்கவேண்டும் என்று என் இரு குழந்தைகளையும் அனைவரும் பாராட்டக் காரணம் அவரின் மேற்பார்வையில் வளர்ந்த பிள்ளைகள் அவர்கள்.
தாயாய் பரிவு காட்டி என்னிடம் மனிதத்தை புகுத்திய மனுஷி. வீட்டிற்கு வரும் எவரையும், இன்முகத்தோடு ‘ வாங்க நல்லாயிருக்கீங்களா? என்று கேட்டு சாப்பிட்டீங்களா? என்று தான் முடியும் அவரது அன்பு.
நான் தயங்குகிற நேரங்களில்., வந்திருக்கிறவர்களுக்கு விருந்து தேவையில்லை. நம்மிடம் இருக்கும் உணவைப் பகிர்ந்து  உண்ணுவதே போதும் என்று உண்ர்த்தியவர். இன்றும் என் வீட்டில் எந்த நேரம் யார் வந்தாலும் சாப்பிடாமல் அனுப்பமாட்டோம்..
அதே நேரம் , ஒரு பெண் வீட்டில் சோறு சமைக்கவும், வீட்டு வேலை செய்யவும் மட்டும் இல்லை; படிக்க வேண்டும். தன் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்,கற்றுக் கொண்டதை தெரியாதவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தெளிவாக வாழ்ந்துக் காட்டியவர்.
என் மாமாவிடம் தொடங்கி, என் கணவர், நான், என்று தாண்டி என் குழ்ந்தைகள் வரை எங்க்ள் அலுவல்களில் அவரது உதவி கட்டாயம் இடம் பெற்றிருக்கும். எங்களது பல குறிப்புகளில் அவரது கையெழுத்து இன்னும் பத்திரமாக இருக்கிறது.
என் மகள் தன் பத்தாம் வகுப்பு வரை எந்த சிறப்பு வகுப்புகளுக்கும் போகாமல் நிறைய மதிப்பெண்கள் பெற்றது அவள் புத்திசாலியாக இருந்தது மட்டுமல்ல அவளது படிப்பில் பாட்டியின் உதவி அதிகமாக இருந்ததும் தான்.
வெறும் ஃபர்ஸ்ட் ஃபாரம் [இன்றைய ஆறாம் வகுப்பு] முடித்து கணவர் வீட்டிற்கு வந்த அவர் தன் ஐந்து சிறிய கொழுந்தமார்களுக்கு தாயாய் பாடங்களை கற்றுக் கொடுத்ததோடு, கற்றுக் கொண்டதும் ஏராளம்.  இரண்டு தலைமுறைகள் தாண்டி பேரப் பிள்ளைகளிடமிருந்து விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் அவர் சளைத்தவர் அல்ல.  
தன் 85 வது வயதிலும் தினந்தோறும் புத்தகங்களை படிப்பார். ஒரு பக்கமாவது படிக்காமல் தூங்கமாட்டார். தன் வாழ்வின் கடைசி ஒரு மாதத்தில் படுக்கையில் கிடந்தபோது கூட ‘என்னால் புத்தகமே படிக்க முடியலை, எதாவது படித்துக் காட்டுமா என்று என்னையும் வாசிக்க வைத்தவர்.
‘அத்தை ஒரு பாட்டு பாடுங்க அத்தை என்று முடிக்குமுன் இனிமையான குரலில் பாடிக் காட்டுவார். முடித்தவுடன்  இந்த பாட்டு விராலிமலை பத்மாஸினியிடம் கற்றுக் கொண்டேன் என்று ஒவ்வொரு பாடலையும் தான் கற்றுக் கொண்ட தோழிகளின் பெயரை நினைவுக் கூர்ந்து தான் முடிப்பார். அவர் கற்றுக் கொண்ட பாடல்களும்,  நடனமும் விராலிமலை தேவதாசிகள் என்று நன்றியோடு கூறுவார். பிராமண குடும்பத்தில் பிறந்து எப்படி அவர்களோடு பழகினீர்கள் என்றால் அவர்களும் மனுஷிகள் தானே என்பார்.  தேவதாசிகளைப் பற்றி அவர்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி கூறுவார். நமக்கு தேவையான நல்ல விஷயங்களை தெரிந்துக் கொள்ள சாதி பார்க்கக் கூடாது என்று போகிற போக்கில் சொல்வார். யாரைப் பற்றி எந்த விஷயத்தைப் பற்றி கேட்டாலும் அவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டுமே நமக்கு சொல்வார்.
தன் 89 ஆண்டு வாழ்க்கையில், சந்தித்த மனிதர்களை, தன் மூன்று பிள்ளைகள், மருமகள்கள், பேரன் பேத்திகளை அவரவர் தன்மைகளோடு அப்படியே ஏற்றுக் கொண்டு நேசிக்க அவரால் மட்டுமே முடிந்தது.
 குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் வீட்டுவேலைகளை பகிர்ந்துக் கொள்ளுதல் அவசியம் என்று தன் வேலைகளை தானே செய்தும், எங்கள் வேலைகளிலும் உதவி செய்து உணர்த்திக் காட்டியவர்.
என் மகன் கம்யூனிஸ்டு, சாமி கும்பிட மாட்டான், கோயிலுக்குப் போக மாட்டான் . நீ தான் அவனை மாற்றி எல்லாம் செய்ய வைக்க வேண்டும் என்று என் திருமணம் முடிந்து வந்தவுடன் என்னிடம் கூறிய அவர் நாளடைவில் நானும் அவரோடு இணைந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞ்ர்கள் சங்கம், அறிவியல் இயக்கம், கூட்டங்களுக்கு சென்ற போது எனக்கு உறுதுணையாய் நின்று மொத்தமாய் என் வீட்டை பாதுகாத்தவர்.
தமுஎகச பணிகளை வீட்டில் தோழர்களோடு செய்யும்போது தனக்கான வேலைகளை மனமுவந்து வாங்கிக் கொண்டு செய்தவர். கணினி வசதி இல்லாத காலத்தில் தமுஎகச கூட்டங்களுக்கு உறுப்பினர்களை அழைக்க அஞ்சல் அட்டைகள் எழுதிய பெரும் பங்கு அவருக்கு உண்டு. அது மட்டுமல்ல ஒவ்வொரு முறை நிதி வசூலிக்கும் போதும் அவரே தன் பென்ஷன் பணத்தில் ஒரு தொகையை முதலில் கொடுத்து துவக்கி வைத்த தோழி.
இதல்லாம் தான் கம்யூனிஸம் என்றால் எந்த கூட்டத்திற்கும் போகாமல், எந்த கட்சி பாடமும் படிக்காமல், தன் வாழ்க்கையே ஒரு பாடமாக கற்று தேர்ந்தது மட்டுமல்ல,எங்களுக்கும் கம்யூனிசத்தை கற்றுக் கொடுத்து ஒரு சிறந்த கம்யூனிஸ்டாக வாழ்ந்தவர் என் மாமியார்..
இன்றும் எங்கள் நினைவுகளில் இருந்துக் கொண்டு எங்கள் எல்லோரையும் வழி நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்.
       



kids corner: Vannathupoochigal

kids corner: Vannathupoochigal: Seerudaiyil Vannathupoochigal!!! Palli maidhanam