Tuesday, 25 June 2013

கற்றுக் கொள்ள எவ்வளவு இருக்கிறது..............

நான்கு நாட்கள் விடுப்பிற்குப்  பின் இன்று பள்ளிக்குப் போனேன். நான்கு நாட்கள் வீட்டில் எல்லோரோடும் ஜாலியாக இருந்து விட்டு இன்று காலை    பள்ளிக்கு கிளம்ப மனசில்லாமல் தான் கிளம்பினேன். நடந்துப் போகும் போது ' நமக்கே இப்படி ஒரு மன நிலை இருக்கிறதே குழந்தைகள் சனி ஞாயிறு விடுமுறைக்குப் பின் எந்த மன நிலையில் பள்ளிக்கு வரும் ? என்று நினைத்துக் கொண்டே நடந்துப் போனேன்.போகும் வழியில் குழந்தைகளின் சலசலப்பு........கேஜி குழந்தைகள் பலதும் அழுதுக் கொண்டே தங்கள் அம்மாக்களிடம்  மறுபடியும் எப்போது பள்ளி விடுமுறை என்று கேட்டுக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தனர்.  
பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களை பார்த்தவுடன்  என் மன நிலை மாறியது. நான்கு நாட்கள் விடுப்பட்ட என் பணிகள் , வகுப்புகள், குறிப்பாக கேஜி வகுப்பின் குழந்தைகள் என் எதிரே  நின்றது......
முதலில் தேங்கிக் கிடக்கும் கோப்புகளை பார்ப்போம் என்று என் அறைக்குள் நுழைந்தேன். குழந்தைகளுக்கான பஸ் பாஸ் விண்ணப்பங்கள், மாற்றுச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள் ஆகியவற்றை பார்த்துக் கொண்டிருக்கும் போது, என் கதவை திறக்க நாலைந்து குரல்கள் முயற்சித்துக் கொண்டு இருந்தன.......
நான் வேலையில் மூழ்கியிருந்ததால், கவனிக்கவில்லை. திடீரென்று என் புடவையை பிடித்து இழுத்தவாறு கேஜியின் சுட்டிப் பெண் ஆமீனாஅஜித்தா...
நிமிர்ந்தால் அவளைச் சுற்றி  நான்கைந்து வாண்டுகள் தங்கள் பைகளோடு    ....
குட்மார்னிங் மேடம், என்றனர்.
வேலையின் எரிச்சலோடு  அவர்களை,  என்ன  என்று பார்த்தேன்....
 நாங்க உங்களை தான் பார்க்க வந்தோம்..... என்றனர்.
'என்ன விஷயம் என்ன வேணும் ? நீங்க உங்க கிளாஸுக்குப் போங்க...எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிட்டு நா அப்புறமா பார்க்க வர்றேன்... ' என்றேன்...
ஒரு சுட்டி, '.நீங்க ஏன் ரொம்ப நாளா ஸ்கூலுக்கு வரலை?   நாங்க உங்களைத் தேடினோம்.'
நீங்க கேட்ட ரோஜாப்பூ நான் கொண்டு வந்தேன். நீங்க வரலை.... இன்னொரு மிஸ் வாங்கிட்டாங்க. நா நாளைக்கு கொண்டு வர்றேன் என்றாள் சாதனா..
ஏன் வரலை? உங்களுக்கு காய்ச்சலா? என்று கேட்டாள் இன்னோரு வாண்டு .ஊசி போட்டிங்களா?... நீங்க வர்றதை பார்த்திட்டு  நான் தான் இவங்களை கூட்டிட்டு வந்தேன்,' என்றான்  மழலையோடு ஹரிஷ்..
குட்டீஸ், என்னைத் தேடினீங்களா?  நான் ஊருக்குப் போயிட்டு வந்தேன்... இனிமே தினமும் வருவேன் சரியா? என்றேன்...
 அப்போது அவர்களைத் தேடி வந்த ஆசிரியர், நீங்களெல்லாம் இங்க இருக்கீங்களா?  மேடம் நீங்க வராம இவங்க உங்களைத் தேடி கேட்டுட்டே இருந்தாங்க......என்றபடி அவர்களை கூட்டிச் சென்றார்.
 பள்ளி திறந்தது முதல்,, ஒரு வாரமாய் என் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கும்  இவர்களை முதலில் பார்க்க வேண்டும் என்று ஏன் எனக்குத் தோன்றவில்லை. வெட்கமாயிருந்தது....... குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ள எவ்வளவு இருக்கிறது எனக்கு?

 

2 comments:

  1. உண்மைதான் அவர்களது அன்பின் உலகம்
    நாமும் அவர்களாக கூடு பாய்ந்தாலன்றி அவர்களை புரிவது கஷ்டம்.உங்கல் எழுத்தில் நீங்கள் கூடு பாய்ந்து விடுவீர்கள்.தொடர்க.மிஸ் நீங்க ஏன் சென்னை வரல;நான் சிகப்பு ரோஜாவோடு காத்திருந்தேன்..தெரியுமா?என்னையும் குழந்தையாய் மாற்றிய உங்கள் பதிவு தொடர்க

    ReplyDelete