29.5.2012
தாய் ஆகிய என்
மாமியார்.....
உடலால் எங்களை விட்டுப்
பிரிந்து ஒரு ஆண்டு கடந்துவிட்டது.
இன்றும் எதற்கெடுத்தாலும்
அவரைத் தேடுகிறது மனசு.
1989ல் எனது
இருபத்தியொன்றாம் வயதில், வாழ்க்கையைப் பற்றி எதுவும் புரியாத நிலையில், என்னை என்
பிறந்த வீட்டிலிருந்து வேரோடு பிடுங்கி புகுந்த வீட்டிற்கு அனுப்பிய நாளிலிருந்து
சென்ற ஆண்டு 28ம் தேதி தன் இறுதி மூச்சு முடிய வாழ்க்கையின் பல்வேறு கோணங்களை
எனக்கு கற்றுக் கொடுத்து என்னை சரியாய் வளர்த்த ஆசிரியர்
‘என்னை விட உனக்கு உன்
மாமியாரைத் தான் ரொம்ப பிடிக்கும்’ என்று பலமுறை என்
அம்மாவை பொறாமைப்பட வைத்த பெண்.
வெறும் இளநிலைப் பட்டம்
முடித்து வந்த இந்த இருபது ஆண்டுகளில் என்னிடம் பல பட்டங்களும்
பாராட்டுப்பத்திரங்களும் இருக்க முக்கிய காரணம் என் மாமியார் எனக்குக் கொடுத்த
ஊக்கம்.
குழந்தைகள் இவர்களைப்
போல் இருக்கவேண்டும் என்று என் இரு குழந்தைகளையும் அனைவரும் பாராட்டக் காரணம் அவரின்
மேற்பார்வையில் வளர்ந்த பிள்ளைகள் அவர்கள்.
தாயாய் பரிவு காட்டி
என்னிடம் மனிதத்தை புகுத்திய மனுஷி. வீட்டிற்கு வரும் எவரையும், இன்முகத்தோடு ‘
வாங்க நல்லாயிருக்கீங்களா? என்று கேட்டு சாப்பிட்டீங்களா? என்று தான் முடியும்
அவரது அன்பு.
நான் தயங்குகிற
நேரங்களில்., வந்திருக்கிறவர்களுக்கு விருந்து தேவையில்லை. நம்மிடம் இருக்கும் உணவைப்
பகிர்ந்து உண்ணுவதே போதும் என்று
உண்ர்த்தியவர். இன்றும் என் வீட்டில் எந்த நேரம் யார் வந்தாலும் சாப்பிடாமல்
அனுப்பமாட்டோம்..
அதே நேரம் , ஒரு பெண்
வீட்டில் சோறு சமைக்கவும், வீட்டு வேலை செய்யவும் மட்டும் இல்லை; படிக்க வேண்டும்.
தன் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்,கற்றுக் கொண்டதை தெரியாதவர்களுக்கு
கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தெளிவாக வாழ்ந்துக் காட்டியவர்.
என் மாமாவிடம் தொடங்கி,
என் கணவர், நான், என்று தாண்டி என் குழ்ந்தைகள் வரை எங்க்ள் அலுவல்களில் அவரது
உதவி கட்டாயம் இடம் பெற்றிருக்கும். எங்களது பல குறிப்புகளில் அவரது கையெழுத்து இன்னும்
பத்திரமாக இருக்கிறது.
என் மகள் தன் பத்தாம்
வகுப்பு வரை எந்த சிறப்பு வகுப்புகளுக்கும் போகாமல் நிறைய மதிப்பெண்கள் பெற்றது
அவள் புத்திசாலியாக இருந்தது மட்டுமல்ல அவளது படிப்பில் பாட்டியின் உதவி அதிகமாக
இருந்ததும் தான்.
வெறும் ஃபர்ஸ்ட் ஃபாரம்
[இன்றைய ஆறாம் வகுப்பு] முடித்து கணவர் வீட்டிற்கு வந்த அவர் தன் ஐந்து சிறிய
கொழுந்தமார்களுக்கு தாயாய் பாடங்களை கற்றுக் கொடுத்ததோடு, கற்றுக் கொண்டதும்
ஏராளம். இரண்டு தலைமுறைகள் தாண்டி பேரப்
பிள்ளைகளிடமிருந்து விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் அவர் சளைத்தவர் அல்ல.
தன் 85 வது வயதிலும்
தினந்தோறும் புத்தகங்களை படிப்பார். ஒரு பக்கமாவது படிக்காமல் தூங்கமாட்டார். தன்
வாழ்வின் கடைசி ஒரு மாதத்தில் படுக்கையில் கிடந்தபோது கூட ‘என்னால் புத்தகமே
படிக்க முடியலை, எதாவது படித்துக் காட்டுமா’ என்று என்னையும் வாசிக்க
வைத்தவர்.
‘அத்தை ஒரு பாட்டு
பாடுங்க அத்தை’ என்று முடிக்குமுன் இனிமையான குரலில் பாடிக் காட்டுவார்.
முடித்தவுடன் இந்த பாட்டு விராலிமலை
பத்மாஸினியிடம் கற்றுக் கொண்டேன் என்று ஒவ்வொரு பாடலையும் தான் கற்றுக் கொண்ட தோழிகளின்
பெயரை நினைவுக் கூர்ந்து தான் முடிப்பார். அவர் கற்றுக் கொண்ட பாடல்களும், நடனமும் விராலிமலை தேவதாசிகள் என்று நன்றியோடு
கூறுவார். பிராமண குடும்பத்தில் பிறந்து எப்படி அவர்களோடு பழகினீர்கள் என்றால்
அவர்களும் மனுஷிகள் தானே என்பார். தேவதாசிகளைப் பற்றி அவர்களின் வாழ்க்கை
முறைகளைப் பற்றி கூறுவார். நமக்கு தேவையான நல்ல விஷயங்களை தெரிந்துக் கொள்ள சாதி
பார்க்கக் கூடாது என்று போகிற போக்கில் சொல்வார். யாரைப் பற்றி எந்த விஷயத்தைப்
பற்றி கேட்டாலும் அவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டுமே நமக்கு சொல்வார்.
தன் 89 ஆண்டு
வாழ்க்கையில், சந்தித்த மனிதர்களை, தன் மூன்று பிள்ளைகள், மருமகள்கள், பேரன்
பேத்திகளை அவரவர் தன்மைகளோடு அப்படியே ஏற்றுக் கொண்டு நேசிக்க அவரால் மட்டுமே
முடிந்தது.
குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் வீட்டுவேலைகளை
பகிர்ந்துக் கொள்ளுதல் அவசியம் என்று தன் வேலைகளை தானே செய்தும், எங்கள்
வேலைகளிலும் உதவி செய்து உணர்த்திக் காட்டியவர்.
என் மகன் கம்யூனிஸ்டு,
சாமி கும்பிட மாட்டான், கோயிலுக்குப் போக மாட்டான் . நீ தான் அவனை மாற்றி எல்லாம்
செய்ய வைக்க வேண்டும் என்று என் திருமணம் முடிந்து வந்தவுடன் என்னிடம் கூறிய அவர்
நாளடைவில் நானும் அவரோடு இணைந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞ்ர்கள்
சங்கம், அறிவியல் இயக்கம், கூட்டங்களுக்கு சென்ற போது எனக்கு உறுதுணையாய் நின்று மொத்தமாய்
என் வீட்டை பாதுகாத்தவர்.
தமுஎகச பணிகளை வீட்டில்
தோழர்களோடு செய்யும்போது தனக்கான வேலைகளை மனமுவந்து வாங்கிக் கொண்டு செய்தவர். கணினி
வசதி இல்லாத காலத்தில் தமுஎகச கூட்டங்களுக்கு உறுப்பினர்களை அழைக்க அஞ்சல்
அட்டைகள் எழுதிய பெரும் பங்கு அவருக்கு உண்டு. அது மட்டுமல்ல ஒவ்வொரு முறை நிதி
வசூலிக்கும் போதும் அவரே தன் பென்ஷன் பணத்தில் ஒரு தொகையை முதலில் கொடுத்து
துவக்கி வைத்த தோழி.
இதல்லாம் தான் கம்யூனிஸம்
என்றால் எந்த கூட்டத்திற்கும் போகாமல், எந்த கட்சி பாடமும் படிக்காமல், தன்
வாழ்க்கையே ஒரு பாடமாக கற்று தேர்ந்தது மட்டுமல்ல,எங்களுக்கும் கம்யூனிசத்தை
கற்றுக் கொடுத்து ஒரு சிறந்த கம்யூனிஸ்டாக வாழ்ந்தவர் என் மாமியார்..
இன்றும் எங்கள்
நினைவுகளில் இருந்துக் கொண்டு எங்கள் எல்லோரையும் வழி நடத்திக் கொண்டு தான்
இருக்கிறார்.
தோழியாய் தொண்டராய் கற்றுக் கொள்ளும் மாணவராய் உற்றுளி உதவும் அன்பராய் உங்கள் அத்தையம்மா சிலிர்க்க வைக்கிறார்.எனக்கு அவரை காணும் வாய்ப்பில்லாது போய் விட்டதே...
ReplyDelete